A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு

சிவஸ்தலம்

திருவாலங்காடு

இறைவன்

வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர்

இறைவி

வண்டார் குழலம்மை

பதிகம்

திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1

வடாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்
திருவாலங்காடு அஞ்சல்
அரக்கோணம் அருகில்
திருத்தணி வட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 631203

ஆலய நேரம்

காலை :  6:00 - 20:00

தொடர்ந்து திறந்திருக்கும்
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு

பரிகாரத் தலம்

திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு

பயண குறிப்புகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலங்களை தரிசனம் செய்ய காலை 8 மணி அளவில் தொடங்கினால், முதலில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெண்பாக்கம் சென்று இறைவன் ஊன்றீஸ்வரை தரிசனம் செய்து பின் மீண்டும் கடம்பத்தூர் செல்லும் சாலை வழியை அடைந்து, திருப்பாச்சூர் வாசீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

அதன் பின் திருப்பாச்சூரில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமாக கடம்பத்தூர் மற்றும் பேரம்பாக்கம் வழியாக கூவம் கிராமத்திலிருந்து திருவிற்கோலம் அடையலாம். பின், அங்கிருந்து திரு இலம்பையங் கோட்டூர் சென்று தரிசனம் முடித்து, பேரம்பாக்கம் வழியாக கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவாலங்காடு அடையலாம்.

நேரம் சரியாக இருப்பின், இந்த 5 தலங்களையும் மாலை 4 மணிக்குள் தரிசனம் செய்து முடிக்கலாம். மீதி நேரம் இருந்தால் அங்கிருந்து தக்கோலம் மற்றும் திருமால்பூர் சென்று ஒரே நாளில் 7 கோவில்களையும் தரிசனம் செய்ய முடியும்.

ஆலய சிறப்புகள்

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வண்டார்குழலி சமேத வடாரண்யேஸ்வரர் கோயில் காளி பீடமாகப் போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர் 2 பதிகங்கள், சம்பந்தர் 1 பதிகம், சுந்தரர் 1 பதிகம் என்று இத்தலத்தின் மீது 4 பதிகங்கள் அமைந்துள்ளன. தேவாரப் பாடல்பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 248-வது தேவாரத்தலம் ஆகும். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், நடராஜபெருமான் நடனம் புரியும் ஐம்பெரும் அம்பலங்களில் இது ரத்தின சபை ஆகும். ஆலமரக் காடாக இருந்த இடத்தில் ஈசன் நடனம் புரிந்ததால் இங்குள்ள சிவன் வட ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரரை தரிசிக்கும் முன், அருகில் உள்ள பத்ரகாளி அம்மனை தரிசித்து செல்வது மரபாக இருக்கிறது. இறைவன் இங்கு காளியுடன் நடந்த நாட்டிய போட்டியில் 17 வகையான தாண்டவங்கள் புரிந்தார் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

இரத்தின சபை
ஊர்த்துவ தாணடவம்

வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகில் உள்ளன.

நடனப் போட்டி

ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.

ஆலய விபரம்
இராஜகோபுரம்

கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார்.

நூற்றுக்கால் மண்டபம்

உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.

இரண்டாவது கோபுரம்

நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும் வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இண்டாவது சுற்றுப் பிரகாரம்

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும், அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

மற்ற சந்நிதிகள்

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்கள்

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

சிறப்பு சந்நிதிகள்

பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள்ளன. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார். பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது

அம்பாள் சந்நிதி

அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை.

இரத்தின லிங்கங்கள்
  • இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது.
  • இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

வடாரண்யேஸ்வரர் ஆலயத்தைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய, ஆலயத்தின் அதிகார பூர்வ இணையதளத்தை காண்க

மேலும் புகைப்படங்கள்