A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

நீலகண்டேசுவரர் திருக்கோவில், திருமண்ணிப்படிக்கரை

சிவஸ்தலம்

திருமண்ணிப்படிக்கரை (தற்போது இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது)

இறைவன்

நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர்

இறைவி

அமிர்தகரவல்லி, மங்களநாயகி

பதிகம்

சுந்தரர் - 1

நீலகண்டேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக சுமார் 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து வருவோர் திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு தாண்டி பாப்பாக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருமண்ணிப்படிக்கரை சிவஸ்தலம் உள்ளது. தற்போது இலுப்பைப்பட்டு என்று வழங்குவதால், இலுப்பைப்பட்டு செல்லும் வழி எது என்று கேட்டுச் செல்ல வேண்டும்.

ஆலய முகவரி

அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோவில்
இலுப்பைப்பட்டு
மணல்மேடு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609202

ஆலய நேரம்

காலை :  6:00 - 11:30

மாலை :  3:30 - 7:30

வரைபடம் – நீலகண்டேசுவரர் திருக்கோவில், திருமண்ணிப்படிக்கரை
தல வரலாறு
தலம் பெயர் வரலாறு

மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும், இலுப்பை மரம் தலவிருட்சமாக உள்ளதால் இலுப்பைப்பட்டு என்றும் இத்தலம் பெயர் பெற்றது. தற்போது இலுப்பைப்பட்டு என்ற பெயர் சொன்னால் தான் வழி கூறுவர்.

பஞ்சபாண்டவர்களின் வழிபாடு

பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமையுடையது இத்தலம். இவ்வாலயத்திலுள்ள ஐந்து சிவலிங்கங்களை பஞ்சபாண்டவர்கள் வழிபட்டுள்ளனர். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். அப்போது இத்தலத்தில் தர்மர் நீலகண்டரையும், அர்ச்சுனன் படிக்கரைநாதரையும், பீமன் மகதீஸரையும், நகுலன் பரமேசரையும், சகாதேவன் முத்துகிரீஸ்வரரையும் பூசித்துள்ளனர்.

நீலகண்டர் — விஷம் உண்ட வரலாறு

துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு

3 நிலை இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் தலமரம் இலுப்பை உள்ளது. பிராகாரத்தில் பீமன், நகுலன் பூசித்த லிங்கங்களும், அடுத்து திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும், வலதுபுறம் அமிர்தகரவல்லி அம்பாள் சந்நிதியும் உள்ளன. இடதுபுறம் சுப்பிரமணியரும், மகாலட்சுமி சந்நிதிகளும், அடுத்துச் சகாதேவன் லிங்கமும் உள்ளது.

வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் நேரே சுவாமி நீலகண்டேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தர்மர் வழிபட்ட நீலகண்டேஸ்வரர், அர்ச்சுனன் வழிபட்ட படிக்கரைநாதர் ஆகிய இருவரும் மற்ற பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவருக்கும் அம்பிகை சந்நிதிகள் உள்ளன. பீமன் வழிபட்ட சிவன் 16 பட்டைகளுடன் சோடஷலிங்கமாக காட்சி தருகிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சகாதேவன் வழிபட்ட முக்தீஸ்வரர் தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

திருப்புகழ் தலம் — முருகர் சிறப்பு

இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். வடக்குப் பிரகாரத்தில் முருகர் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவர் வில்லேந்திய வடிவில் எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

பதிக சிறப்பு

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பதிகம்திருப்புகழ்
நீலகண்டேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்