A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

பனங்காட்டு ஈஸ்வரர் திருக்கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர் (திருப்பனங்காடு)

சிவஸ்தலம்

திருவன்பார்த்தான் பனங்காட்டுர் (தற்போது திருப்பனங்காடு என்று வழங்குகிறது)

இறைவன்

பனங்காட்டு ஈஸ்வரர், தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்

இறைவி

அமிர்தவல்லி, கிருபாநாயகி

பதிகம்

சுந்தரர் - 1

பனங்காட்டு ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மீ. வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மீ. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மீ. சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும். சற்றே கடந்து செல்ல ஆலயம் வரும்.

பேருந்து வசதி - காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து கலவை வழியாக ஆரணி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி திருப்பனங்காடு கூட்டு ரோடு அடையலாம். அங்கிருந்து 2 கிமீ நடந்து செல்ல திருப்பனங்காடு ஊரை அடையலாம். காஞ்சிபுரத்தில் இருந்து 74C பேருந்து திருப்பனங்காடு கூட்டு ரோடு வழியாக செல்கிறது. ஆட்டோ வசதிகள் ஐயங்கார் குளம் கூட்டு ரோட்டில் இருந்து உள்ளது.

குறிப்பு - ஷேர் ஆட்டோ, உணவக மற்றும் பூஜை பொருட்கள் வாங்கும் வசதிகள் அருகில் இல்லை. திருப்பனங்காடு கோவில் செல்லும் வழியில் சரியான சாலை மற்றும் மின் விளக்குகள் வசதி இல்லாத காரணத்தால் இருட்டும் முன் சென்று திரும்புவது நல்லது. அர்ச்சகர் வீடு கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்பனங்காடு அஞ்சல்
வழி வெம்பாக்கம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604410

ஆலய நேரம்

காலை :  7:00 - 12:00

மாலை :  5:00 - 8:00

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – பனங்காட்டு ஈஸ்வரர் திருக்கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர் (திருப்பனங்காடு)
கோவில் அமைப்பு
ஓத்தூர்

சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது என்று சிலர் கூறினாலும் உண்மையில் இப்பெயர் பனம் மரம் (தாள விருட்சம்) அடர்ந்திருந்த காட்டால் வந்தது. "திரு" அடைமொழி சேர்ந்து திருப்பனங்காடு என்றாயிற்று.

ஆலய கட்டமைப்பு

கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி.

இரு மூலவர் சந்நிதிகள்

வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது.

இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.

தல புராண வரலாறு - அகத்தியர்
தாலபுரீஸ்வரர்

கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.

அகத்தியர் பூஜித்த பிற தலங்கள்

தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட ஸ்தலங்கள் -

புலத்தியர் மற்றும் கிருபாநாதேஸ்வரர்

அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.

கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார்.

அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.

தலவிருட்சம் - பனைமரம்

அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.

முக்கிய எச்சரிக்கை

இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள்:

  1. புறவார் பனங்காட்டூர்
  2. திருவோத்தூர்
  3. திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)
  4. திருப்பனந்தாள்
  5. திருவலம்புரம்
  6. திருப்பனையூர்
அம்பாள் சந்நிதிகள்

இரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப் போன்று இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் இவ்வாலயத்தில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.

அரிய சிற்பங்கள்

இக்கோயிலின் உள் மண்டபத்தில் கற்தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன:

  • அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது.
  • உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது.
  • உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது.
  • இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பதிகம்
மேலும் புகைப்படங்கள்